தமிழ்நாட்டில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்ய கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு!

 
the Kerala Story

தமிழ்நாட்டில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை செய்ய கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கேரளா ஸ்டோரி”.கேரளாவைச் சேர்ந்த  இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த  32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு  கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு,  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று  காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது.  இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. இதனிடையே சமூகப் பாதுகாப்பு கருதி மேற்கு வங்காளத்தில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தனர். 
 
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்காள அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மேற்கு வங்காளத்தில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சிலர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதனை தடை செய்வீர்களா? பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம். அதை விட்டுவிட்டு அடிப்படை உரிமையை எப்படி பறிக்க முடியும். தமிழ்நாட்டில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.