கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!

 
Q Q

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தற்கொலை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேர்வு பயம், தேர்வில் தோல்வி, பள்ளியில் பாகுபாடாக நடத்தப்படுதல் உள்பட பல காரணங்கள் மாணவ-மாணவிகளின் தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளன. இதனை தடுக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கூட தொடர்ந்து மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

 

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த 2022ம் ஆண்டில் 13,044 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த ஆண்டு நாடு முழுவதும் நிகழ்ந்த 1,70,924 தற்கொலை செய்த நிலையில் மாணவ-மாணவிகள் மட்டும் 13,044 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2001ம் ஆண்டில், மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை 5,425 ஆக இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நீட் தேர்வுக்க பயந்தும், நீட் தேர்வில் தோல்வியடைந்தும் மாணவ-மாணவிகள் சமீப காலமாக தற்கொலை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த 17 வயது மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள பயிற்சி மையத்தில் படித்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த 2023 ஜூலை 24ம் தேதி அவர் தற்கொலை செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை கூறினார்.

 

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இந்த சமயத்தில் மாணவர்கள் மன உளைச்சல், கல்வி தொடர்பான அழுத்தத்தை தடுக்க கல்வி நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது. அதுமட்டுமின்றி உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

மாணவர்களின் தற்கொலைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றம் அல்லது சட்டசபைகளில் பொருத்தமான சட்டம் இயற்றும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறி வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. இந்த வழிக்காட்டு நெறிமுறைகள் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள், தங்கும் விடுதிகள் உள்பட கல்வி சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிக்காட்டுதல் நெறிமுறைகளின் விவரங்கள் வருமாறு:

* கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

* மாணவர்களின் குறைதீர் முகாம்களை நடத்த வேண்டும் .

* கல்வி தொடர்பான அழுத்தம் – தேர்வு பயம் உள்ளிட்டவற்றை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க ஒரு தனிக்குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மாணவர்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை வழங்கி மனஅழுத்தத்தை குறைக்கும் பணியை செய்ய வேண்டும்.

* அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை மனநல பயிற்சி வழங்க வேண்டும். மனஉளைச்சலை கண்டறிவது உள்பட அவர்களுக்கான பிரச்சனைகளை கண்டறியும் வகையில் இது அமைய வேண்டும்.

* விளிம்பு நிலை சமூகங்களை சேர்ந்த மாணவர்களுடன் பாகுபாடு இல்லாமல் ஆசிரியர்கள், ஊழியர்கள் பழக பயிற்சி வழங்க வேண்டும்.

* பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை உள்ளிட்ட குறைகளை கேட்க தனி குழுக்கள் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

* பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மனநல கல்வி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.

* தங்கும் விடுதிகள், வகுப்பறைகள், பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இணையதளங்களில் தற்கொலையை தடுக்கும் உதவி மையங்களின் உதவி எண்களை பெரிய எழுத்தில் எழுதி இருக்க வேண்டும்.

* டெலி-மானஸ் மற்றும் பிற தேசிய உதவி எண்களை அனைவரும் எளிதில் பார்கும் வகையில் வைக்க வேண்டும். இவை தவிர மொத்தம் 15 வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.