கல்வி கடனுக்கான காப்பீட்டு கட்டணத்தில் முறைகேடு-எஸ்பிஐ உதவி மேலாளர் கைது

 
எஸ்பிஐ

வேலூரில் கல்வி கடனுக்கான காப்பீட்டு கட்டணத்தில் முறைகேடு செய்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி.ஐ. வங்கி உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார். 

SBI Recruitment 2022: எஸ்ஐபிஐ வங்கியில் மெகா வேலைவாய்ப்பு: 641 சேனல்  மேனேஜர் பதவி காலியிடம் அறிவிப்பு


விருதுநகர் மாவட்டம் லட்சுமி நகரை சேர்ந்தவர் யோகேஸ்வர பாண்டியன் (38). விருதுநகர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணியாற்றி வந்த இவர், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று பாரத ஸ்டேட் வங்கி வேலூரின் சில்லறை சொத்துக்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முனைய மத்திய கடன் மையத்தின் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் பாரத ஸ்டேட் வங்கியால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனில் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீட்டுக் கட்டணத்தை பிரித்து பாரத ஸ்டேட் வங்கியின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தும் பணியினை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 5-6-2018 முதல் 1-7-2021 வரை மூன்று ஆண்டுகளாக 137 வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடனில் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீட்டுக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் ஆயுள் காப்பீட்டு கழக நிறுவனத்திற்கு செலுத்தாமல் உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் முறைகேடாக 34 லட்சத்து 10 ஆயிரத்து 622 ரூபாயை அவ்வப்போது தனது சொந்த வங்கி கணக்கு வைத்துள்ள கனரா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளுக்கு வங்கி வரை ஓலை (DD) மூலம் மாற்றியுள்ளார். 

sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய நம்பர்!

பாரத ஸ்டேட் வங்கியின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு காப்பீட்டு கட்டணம் வந்து சேராதது கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய வங்கி அதிகாரிகள் உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் மூன்று ஆண்டுகளாக கல்வி கடனின் காப்பீட்டு கட்டணத்தில் மோசடி செய்து 34 லட்சத்து 10 ஆயிரத்து 622 ரூபாய் கையாடல் செய்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து யோகேஸ்வர பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் கையாடல் செய்யப்பட்ட பணத்தை உடனடியாக திருப்பி செலுத்தவும் வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸ்க்கு ஓராண்டாக பதில் அளிக்காமலும் பணத்தை திருப்பி செலுத்தாமலும் காலம் தாழ்த்தி வந்த யோகேஸ்வர பாண்டியன் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சில்லரை சொத்துக்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முனைய மத்திய கடன் மையத்தின் மேலாளர் சிவகுமார் புகார் அளித்தார். இதனை அடுத்து காட்பாடி விஜி ராவ் நகரில் வசித்து வந்த யோகேஸ்வர பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.