தி.மு.க கூட்டங்களில் இனி இதைச் சொல்லுங்கள்..!! ஓம் காளி ஜெய் காளி... த.வெ.க ஒரு ஓடுகாலி!
த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய், மதுராந்தகம் இடைத் தேர்தலில் த.வெ.க சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆத்தூரில் வெள்ளிக்கிழமை (25.09.2026) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது விஜய் பேசுகையில்: “இங்கே நான் ஒருத்தராக வரவில்லை, எப்போதும் போல உங்கள் வீட்டுப் பிள்ளையாக,உங்கள் வீட்டு மகனாக, உங்க வீட்டு அண்ணனாக, உங்க வீட்டு தம்பியாக நான் வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும், ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா, உங்கள் த.வெ.க ஆட்சிக்கு வரக்கூடாதா, ஒரு தனி கட்சியாக, சாமானியர்களுடைய ஒரு கட்சியாக, பெண்கள் பேராதரவுடன் இளைஞர்களின், பேராதரவுடன், குடும்பங்களின் பேராதரவுடன், பெண்களுடைய பாதுகாப்புக்காக, போதை பொருளை ஒழிக்க, ரொம்ப முக்கியமாக லஞ்சத்தை ஒழிக்க, ஊழலை ஒழிக்க உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? பிறகு ஏன் இந்த தி.மு.க தினமும்... மன்னிக்கணும் கொஞ்சம் டச் விட்டுப்போய் விட்டது. தீய சக்தி தி.மு.க” என்று விஜய் குறிப்பிட்டுப் பேசினார்.
அப்போது விஜய், “ஓம் சக்தி பராசக்தி” என்று கூறியதும் திரண்டு இருந்த தொண்டர்கள் தீய சக்தி தி.மு.க என்று கோஷம் விட்டனர். விஜயின் இந்த பஞ்ச் டயலாக் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் பேசும்போது, விஜய்க்கு போட்டியாக, “ஓம் காளி ஜெய் காளி, த.வெ.க ஒரு ஓடுகாலி என்று சொல்லுங்கள்” என்று பஞ்ச் டயலாக் பேசினார்.
தி.மு.க இளைஞரணி தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது உதயநிதி பேசுகையில், “இன்று செப்டம்பர் 27. கடந்த ஆண்டு இதே தேதியில் நடந்ததை ஞாபகப்படுத்தத் தேவையில்லை. உங்கள் அனைவருக்குமே தெரியும். நம் அனைவரின் மனங்களிலும் மிகுந்த காயத்தை ஏற்படுத்திய ஒரு வடு. இதே தேதியில் தற்போதைய முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வதாகக் கூறி, கிட்டத்தட்ட 10 மணிநேரம் தாமதமாகச் சென்று, அங்கிருக்கக் கூடிய மக்களுக்கு குடிநீர் வசதியோ கழிப்பறை வசதிகூட செய்யாமல் மக்கள் நெருக்கடி ஏற்பட்டு, 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிர்கள் பறிபோன நாள்.” என்று கரூர் துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த சம்பவத்துக்காக முதல்வர் விஜய் இன்று ஆறுதலும் இரங்கலும் தெரிவிக்கிறார். ஆனால், அன்றைக்கு தெரிவித்தாரா?
வண்டிமேல் ஏறி பாட்டு பாடிவிட்டு, அவர் கண் முன்னாலேயே 20 பேர் இறந்தபோதும்கூட அங்கிருந்து ஓடி திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று விட்டார். அங்கேயும் மக்களுக்கோ பத்திரிகையாளர்களுக்கோ பதிலளிக்காமல் சென்றுவிட்டார். சென்னை விமான நிலையத்தை அவர் அடையும்போது 40 பேர் இறந்துவிட்டனர். அப்போதும் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை.” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “கரூர் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. எந்தவொரு குற்ற உணர்ச்சியோ கொஞ்சம்கூட மனசாட்சியோ இல்லாமல் ஓடிப்போனவர்தான் இன்றைய ஓடுகாலி முதலமைச்சர். இன்றைக்கு வேண்டுமானால் மக்களை ஏமாற்றி அவர் முதலமைச்சர் ஆகியிருக்கலாம். ஆனால், இதை நினைத்து அவரால் ஒருநாள்கூட நிம்மதியாக தூங்க முடியாது.” என்று உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை சாடினார்.
விஜய் கடந்த காலங்களில் தி.மு.க-வை விமர்சனம் செய்ததைக் குறிப்பிட்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த 2 ஆண்டுகளாக விஜய் தி.மு.க தீயசக்தி என்று கூறி வந்தார். அப்போதெல்லாம் நாம் (தி.மு.க) ஆளுங்கட்சியாக இருந்தோம்; அவர் எதிர்க்கட்சியாக இருந்தார். இப்போது நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க ஒரு ஓடுகாலி’ என்று சொல்லுங்கள். இனிவரும் ஒவ்வொரு தி.மு.க கூட்டத்திலும் இதனைச் சொல்ல வேண்டும்.” என்று தி.மு.க தொண்டர்களுக்கு கட்டளையிட்டார்.
“இன்று இரு தொகுதிகளிலும் வந்த இடைத்தேர்தல் இயற்கையாக வந்ததா? இந்த இடைத்தேர்தல் வந்ததற்கு யார் காரணம்?” என்று கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், “சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க-வினருக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இன்றைக்கு நடக்கக்கூடிய ஆட்சி, நாம் போட்ட பிச்சையில்தான் நடக்கிறது. ஏனெனில், நம்முடன் கூட்டணி வைத்து, நம் தலைவரின் பெயரைச் சொல்லி, வாக்கு சேகரித்து வெற்றி பெற்றவர்களின் தயவால்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் இந்த ஆட்சியை தி.மு.க போட்ட பிச்சை என்கிறோம்.” என்று கடுமையாகச் சாடினார்.
விஜய் முதலமைச்சராவதற்காக தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு ஷோஃபா அனுப்பினார். அ.தி.மு.கவையும் இரண்டாகப் பிளந்து, அங்கிருந்த ஒரு சில தலைவர்களுக்கு மட்டும் ஷோஃபா கொடுத்து, அவர்களின் எம்.எல்.ஏ-க்களையும் அழைத்தார். தி.மு.க-வினர் மக்களுக்குக் காசு கொடுப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டு வைத்த முதல்வர், எம்எல்ஏ-க்களையே காசுகொடுத்து தூக்கிவிட்டார். அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது” என்று என்று உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை குற்றம் சாட்டினார்.

