திராவிட ஆட்சி என்ற பெயரில் ஒரு குடும்பம் கொள்ளையடிக்கிறது! - சவுக்கு சங்கர்

 
savukku

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் சவுக்கு சங்கர். கடந்த 2008ஆம் ஆண்டு அதிகாரிகள் பேசி கொண்ட ஆடியோவை ஊடகங்களுக்கு கசியவிட்ட விவகாரத்தில் சங்கர் கைது செய்யப்பட்டார். இதனால் சங்கரை பணியிடை நீக்கம் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. 

2வது நாளாக சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டம்..!

இதனையடுத்து வெளியே வந்த சவுக்கு சங்கர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியிலான பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதற்கிடையே சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை  தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து செப்டம்பர் 15ஆம் தேதி அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட சங்கரிடம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் வழங்கியது.  மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய 6 மாத கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது காட்டி உள்ளனர். குறிப்பாக  கடந்த 2020ஆம் ஆண்டு ஈ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்தை பதிவிட்டதற்காக இரண்டு வழக்குகளும், 2021ஆம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக, அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாலும் 2 வழக்குகளும், சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்குகளில் கடந்த வெள்ளிகிழமை சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொடுத்து நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை எழும்பூர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்திலிருந்து போலீசால் அழைத்து செல்லப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “ திராவிட ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. அதைப்பற்றி பேசியதற்காகதான் என் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. வெளியே வந்து இந்த கொள்ளைக் கூட்டத்தை தொடர்ந்து அம்பலத்துவேன்” எனக் கூறினார்.