தண்ணீரை சேமிச்சு வச்சுக்கோங்க.. சென்னையில் இன்று 6 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..

 
 குடிநீர் வாரியம்

சென்னையில் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள 6 இடங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தின் இணை இயக்குநர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 750 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 750 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயை இணைக்கும் பணி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஸ்டெர்லிங் சாலையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், இன்று (31-ம் தேதி) இரவு 7 மணி முதல் செப்.1-ம் தேதி மதியம் 3 மணி வரை நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  குடிநீர் வாரியம்

மேலும், இப்பகுதி பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அவசரத் தேவைகளுக்கு லாரி மூலமாக குடிநீரை பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்த தடையுமின்றி வழக்கம்போல்  வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.