சௌகார் ஜானகியின் உடல் இன்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்..!
நடிகை சௌகார் ஜானகியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.. பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலமானார்.
செளகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு மொழியில் அவர் நடித்த செளகார் என்ற படத்தின் மூலம் ஜானகி தனது பெயருக்கு முன்பாக செளகார் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்.
செளகார் ஜானகியின் மறைவு பேரிழப்பு என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்."திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்த அவர் பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்குப் பேரிழப்பு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

