பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட சத்யா ஜாமினில் விடுவிப்பு
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கல்யாணராணி சத்யாவை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த், திருமணத்துக்காக ஆன்லைன் செயலி மூலமாக பெண் தேடி வந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது மணப்பெண் சத்யாவுக்கு 12 பவுன் தங்க நகைகளை மணமகன் வீட்டர் அணிவித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு சத்யாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கணவர் மகேஷ் அரவிந்த், மனைவி சத்யாவின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது அதில், ஆண்கள் சிலருடன் சத்யா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்யா திடீரென வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த், இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சத்யா திருமணம் செய்து ஏமற்றிவிட்டதகவும் 50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்துவிட்டார். பலபேரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். விசாரித்த போது, சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவரில் இருந்து காவல் துறையினர், தொழில் அதிபர் என பலரை திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஜாமினில் விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் 60 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யவில்லை என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.தனபால் கல்யாண ராணி சத்யாவை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.