சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : 5 மணி நேரத்திற்கு பின் தொடங்கிய மீட்பு பணி..

 
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : 5 மணி நேரத்திற்கு பின் தொடங்கிய மீட்பு பணி..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென இன்று காலை  வெடிவிபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மீட்புப் பணிகள் தாமதமாகவே தொடங்கின. 

சிவகாசி அருகே சாத்தூர் முத்தாள்நாயக்கன்பட்டியில் கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இவர் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று இந்த பட்டாசு ஆலை இயங்கி வருவதாக கூறப்படுகிறது.  இந்த ஆலையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அறைகளில் ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

 

இந்நிலையில், வழக்கம் போல  இன்று காலை (சனிக்கிழமை)  பட்டாசு தயாரிக்கும் பணிக்கான முன்னேற்பாடாக மருந்து கலவை தயாரிக்கும் பணியில் இங்கு உள்ள தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.  பயங்கர சத்தத்துடன்  தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால்  மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த  சாத்தூர் சிவகாசி வெம்பக்கோட்டை தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.   பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டன.   பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பட்டாசு ஆலைக்குள் சென்று மீட்பு பணியை தொடங்க முடியாமல் போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் காத்திருந்த நிலையில், 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை யாருக்கும் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.