#BREAKING சாத்தான்குளம் வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை! 6 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி
6 வருடங்களுக்கு பிறகு சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வர்த்தகர் ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இருவரும் அலைபேசி விற்பனை, பழுது நீக்கும் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கில் கடையை ஜெயராஜ் அரசு அனுமதித்த நேரத்தைவிட தாமதமாக மூடியதாக கூறி அவரையும், மகனையும் போலீசார் ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்று தாக்கியதில் இருவரும் இறந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் பால்துரை என 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பால்துரை 2020-ல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மீதமுள்ள 9 போலீஸாரும் குற்றவாளிகள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிக கொடுமையானவை எனக் கூறிய நீதிபதி முத்துக்குமரன், இவ்வழக்கில் மரண தண்டனை விதிப்பதே சரியானது என்றார். சட்டத்தை காக்க வேண்டியவர்களே இப்படி செய்துள்ளனர், பழிவாங்கும் நோக்கில் இருவரும் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். இவ்வழக்கில் தொடர்புடைய 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.15 லட்சம் அபராதமர் விதிக்கப்பட்டுள்ளது.

