சாத்தான்குளம் வழக்கு- அப்ரூவராக மாற தயார் என காவல் ஆய்வாளர் மனுதாக்கல்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன் என்று காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கொடுநிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின்பும் வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. விசாரணையை விரைந்து முடிக்காமல் இந்திய ஒன்றிய அரசின் குற்றப்புலனாய்வுத்துறை தொடர்ந்து காலங்கடத்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் 22.06.2020 ஆம் நாள் அப்படுகொலைகள் தமிழ்நாடு காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் சி.பி.சி.ஐ.டி முதலில் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், பின்பு இந்திய ஒன்றிய அரசின் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இப்படுகொலைகள் தொடர்பாக அன்றைய சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 105 சாட்சிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.இவ்வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில் ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. கால அவகாசம் கோரியதன் விளைவாக, படுகொலை நிகழ்ந்து ஐந்தாண்டுகளாகியும் இதுவரை வழக்கு விசாரணை முடிவடையவில்லை.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் (A1), அப்ரூவராக மாறத் தயாராக உள்ளதாகவும் அரசுத்தரப்பு சாட்சியாக மாறுவதாகவும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன். அனைத்து காவலர்களும் செய்த குற்றங்களை சொல்ல விரும்புகிறேன். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை, மகன் குடும்பத்துக்கு நீதி கிடைக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு, வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


