சென்னையில் தள்ளுவண்டி வியாபாரிகளை விரட்டியடிக்கும் காவல்துறையினர்- சசிகலா கண்டனம்

 
சசிகலா

திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் தலைகுனிந்த தமிழகம், இனியும் தாங்குமா? என மக்கள் வேதனையடைவதாக சசிகலா சாடியுள்ளார்.

திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு.. சைலண்டாய் சம்பவம் செய்த வி.கே.சசிகலா..! ஓ  அவருக்குத் தான் இந்த மெசேஜா? | Sasikala says change will come after Lok  Sabha election 2024 results ...

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் துணிச்சலோடு செயலாற்றிய, ஸ்காட்லான்ட் யார்டு காவல்துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை இன்றைக்கு செயல்பட இயலாத வகையில் முடங்கி போய் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான சட்ட விரோத செயல்களில் திமுகவை சேர்ந்தவர்களே ஈடுபடுவதால் அவர்கள்மீது எந்தவித சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல், வேடிக்கை பார்ப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் இன்றைக்கு ஒரு சாமானியர் சொந்த வீடு கட்டுவதற்கு முயன்றால் கூட உடனே அவர்களிடம் சென்று திமுகவை சேர்ந்த கவுன்சிலர்களும் அவரது ஆதரவாளர்களும் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். சமீபத்தில் கூட திரைப்படப்பாணியில் மடிப்பாக்கத்தில் வீட்டு உரிமையாளரான வெளிமாநிலத்தை சேர்ந்த முதியவரை திமுகவை சேர்ந்தவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி கன்னத்தில் அடித்து அச்சுறுத்தியதால் அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனைக்கே சென்றுவிட்டார். மேலும், சென்னை 14வது மண்டல அதிகாரிகளோ தங்கள் பங்குக்கு, விதிகளை மீறி கால்வாய் அமைத்துள்ளதாக கூறி இதே முதியவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். எனவே, தமிழகத்தில் சாமானிய மக்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற முடியாமல் வேதனைப்படுகிறார்கள். இதுதான் இந்த விளம்பர திமுக அரசின் மூன்றாண்டு சாதனையா? என்று எண்ணத்தோன்றுகிறது.

விசிடி சசிகலா , வி.கே சசிகலா ஆன கதை - sasikala history - Samayam Tamil

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மர்மமான முறையில் அவரது வீட்டின் அருகே எரிந்த நிலையில் கிடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இன்றைக்கு கொலை நடக்காத நாட்களே இல்லை என்ற அளவுக்கு திருநெல்வேலி நகரம் ஒரு கொலை நகரமாக உருமாறிவிட்டதாக சொல்லி அங்குள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகே காவல்துறையினர் மீதே நாட்டு வெடிகுண்டு வீச முயன்றதாக செய்திகள் வருகின்றன. மேலும் கடலூர் ஆயுதப்படை காவலர் ஒருவர் பெண் காவலர்களால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக தலைமையிலான ஆட்சியில் இது போன்ற எண்ணற்ற வெட்ககேடான நிகழ்வுகள் தமிழகத்தில் ஒவ்வொருநாளும் அரங்கேறி வருகின்றன.

தமிழகத்தில் எங்குபார்த்தாலும் போதை பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த போதை ஆசாமிகளால் தமிழகத்தில் ஏழை எளிய சாமானிய மக்கள், பெண்கள் உள்ளிட்ட யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலை நிலவுகிறது. போதை பொருட்களை ஒழித்து கட்ட திமுக தலைமையிலான அரசால் ஏன்? எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதற்கு தலைப்பாகை சூடியதுபோல் சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்த ஜாபர் சாதிக்கிக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்து ஆட்டம் போட்டது திமுகவின் இந்த மூன்றாண்டு சாதனைகளில் ஒன்று.

தமிழக காவல்துறை ஆளும்கட்சியினரின் அழுத்தங்களுக்கு உள்ளாகி இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிற திமுகவினரை கண்டும் காணாமல் இருக்கிறதா? என்பதும் தெரியவில்லை. திமுகவினருக்கு இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட எங்கிருந்து துணிச்சல் வருகிறது. எப்படிப்பட்ட தவறுகள் செய்தாலும் அதிலிருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இன்றைக்கு திமுகவினர் உலா வருகிறார்கள். திமுகவில் மேல்மட்டத்தில் இருப்பவர்களின் பரிபூரண ஆசீர்வாதத்தால் இது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா? என்பதும் தெரியவில்லை.

சென்னை வினோத் வீடியோ விஷன் முதல் அரசியலில் இருந்து விலகுகிறேன் வரை.. யார்  இந்த வி.கே. சசிகலா? | Bio of VK Sasikala who quit from public life - Tamil  Oneindia

தமிழகத்தில் டெல்டா விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் என மொத்தம் 9 மணி நேரமாக வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரத்தை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது ஆட்சியில் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள வசதியாக 12 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியில்  மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும், மேலும் மீதமுள்ள நேரங்களில் சுழற்சி முறையில் வழங்கப்படுவதாலும், திடீரென்று மின்தடை ஏற்படுவதாலும் தங்களுக்கு எந்தவித பலனும் இல்லை என டெல்டா விவசாயிகள் மிகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை மாநகரத்தில் பல இடங்களில் தள்ளு வண்டிகளில் உணவு விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் இன்றைக்கு நிம்மதியாக தங்கள் தொழிலில் ஈடுபட முடியாமல், காவல்துறையினரால் விரட்டி அடிக்கப்படுகின்றனர். அதாவது, ஆளும்வர்க்கத்தினரின் குடும்பத்தை சேர்ந்த பெரிய உணவகங்களின் விற்பனையை அதிகரிக்க இவ்வாறு செய்கிறார்களோ? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

மேலும், தமிழகத்தில் இன்றைக்கு பொதுமக்கள் சாலைகளில் தங்களது  இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மூலமாக பயணிப்பதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர்.  அதாவது, வீட்டை விட்டு வெளியில் வந்தாலே இடைமறிக்கும் காவல்துறையினர், அபராதம் என்ற பெயரில் கையில் வைத்திருக்கும் சிறு தொகையையும் வசூலித்து விடுவதாகவும், கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் தங்கள் சாப்பாட்டிற்காக வைத்துள்ள பணத்தையும் காவல்துறையினரிடம் இழக்க வேண்டியதாகிவிட்டது என சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்த காவல்துறையோ, இன்றைக்கு பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க பயன்படுத்தப்படுகிறதோ? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர். இது தான் இந்த திமுக தலைமையிலான விளம்பர அரசின் மூன்றாண்டு கால சாதனையாக பார்க்கப்படுகிறது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அள்ளிவிட்ட வாக்குறுதிகளை மக்கள் மறந்து விட்டதாக எண்ணுகிறது. திமுகவினரின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை இன்றும் தமிழக முதல்வரும், அவரது தவப்புதல்வரும் தேடிவருகிறார்கள். பெண்களுக்கு இலவச பேருந்து வசதி என சொல்லிவிட்டு அந்த குறிப்பிட்ட பேருந்தை ஒளித்து வைத்ததுதான் திமுக அரசின் சாதனை. அதேசமயம் ஓட்டை உடைசல் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் துயர் துடைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியை தூக்கி மனையில் வை" என்ற பழமொழியைப் போல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிக்கவும் தண்ணீரின்றி, பயிர்களை காக்கவும் நீர் இன்றி மக்கள் தவித்து வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெயிலின் தாக்கத்தால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, தொடர் மின்தடை போன்றவற்றை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரியவில்லை. திமுகவினர் இந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் தலை நிமிர்ந்ததாக கூறுகின்றனர், ஆனால் தமிழகத்தில் வாழும் மக்கள் இந்த மூன்றாண்டு காலம் தங்களை கசக்கி பிழிந்ததுதான் மிச்சம். இன்னும் எஞ்சியிருக்கும் மிச்ச காலத்திலும் திமுக தலைமையிலான அரசு நம்மை என்ன செய்ய காத்திருக்கிறார்களோ என்று எங்கு பார்த்தாலும் மக்கள் வேதனையில் விடும் பெரும் மூச்சு இயற்கையின் வெப்பத்திற்கே சவால் விடுவதாக அமைந்ததுதான் திமுகவினரின் மூன்றாண்டு கால வேதனையாக பார்க்கப்படுகிறது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.