விசைத்தறி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுக- சசிகலா

 
சசிகலா பேட்டி

கூலிக்கு நெசவு தொழில் செய்யும் ஏழை, எளிய, சாமானிய விசைத்தறி உரிமையாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஜவுளி உற்பத்தியாளர்கள் நிறைவேற்றிடவேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு கோரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 15 மாதங்களாக பல்வேறு வகையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும், கடந்த 28 நாட்களாக உற்பத்தி நிறுத்த போராட்டமும் செய்து வந்த நிலையில், தற்போது 5 நாட்களாக குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூலிக்கு நெசவு தொழில் செய்யும் ஏழை, எளிய, சாமானிய விசைத்தறி உரிமையாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஜவுளி உற்பத்தியாளர்கள் நிறைவேற்றிடவேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக தலைமையிலான விளம்பர அரசு உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய மூலதனமாக விளங்குகின்ற வகையில் விசைத்தறி ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. சுமார் மூன்று  லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. ஆனால் இன்றைக்கு பல்வேறு காரணங்களால் நெசவு தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இதற்கு திமுக தலைமையிலான அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தியதன் விளைவாக, ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக லட்சக்கணக்கான நெசவாளர்கள் வேலை இழந்து பரிதவிக்கின்றனர். இதன் விளைவாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வந்த பல லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் இன்றைக்கு சீரழிந்துவிட்டது. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை சுமார் ரூ.800 கோடிக்கு மேல் ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், லட்சக்கணக்கான காடாக்கள் தேக்கமடைந்து இருப்பதாகவும் விசைத்தறி தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சசிகலா

இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் சார்பிலும் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது. அதாவது கழிவு பஞ்சுகளின் விலையை கட்டுப்படுத்த கோரியும், தொழில் நிறுவனங்களை அழித்திடும் வகையில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வருடம் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்தும் வகையில் அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட OE மில்கள், சலவை மற்றும் சிபி மில்கள் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கரடிவாவி, காரணம்பேட்டை, சாமலாபுரம் உள்ளிட்ட பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் OE மில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இன்று நடைபெறுகின்ற இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தால். நாள் ஒன்றுக்கு சுமார் 32 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் எனவும், மில்லில் பணிபுரியும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று வேலை இழந்துள்ளதாகவும் மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிகாலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஊதியம் உயர்த்தப்பட்டதையும் இந்நேரத்தில் திமுக ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். எனவே, திமுக தலைமையிலான அரசு இனியும் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களிடமும், விசைத்தறி தொழிலாளர்களிடமும் உடனே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வினை ஏற்படுத்த வேண்டும். ஆனால் திமுக தலைமையிலான அரசு இதுபோன்று விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்திவருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இதெற்கெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.