“திமுகவினரின் ஆணவப்பேச்சு அரசு அதிகாரிகளை பரிதாப நிலைக்கு தள்ளியிருப்பது வெட்கக்கேடு”- சசிகலா

 
பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு- சசிகலா

அரசு அதிகாரிகளை மிரட்டியுள்ள திமுக கட்சியை சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை, தமிழக முதலமைச்சர் உடனே  எடுக்க வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா பேட்டி

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவை சேர்ந்த தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியிருப்பதாக ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில்"கலெக்டர், எஸ்.பி யாராக இருந்தாலும் எனது பேச்சைத்தான் கேட்கவேண்டும், இல்லையென்றால் கதையை முடித்துவிடுவேன்" என ஆணவத்துடன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது போன்று ஆளும்கட்சியினரின் ஆணவப்பேச்சின் மூலம், அரசு அதிகாரிகளை பரிதாப நிலைக்கு தள்ளியிருப்பது மிகவும் வெட்கக்கேடானது. தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. இதுபோன்ற திமுகவினரின் அராஜக போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியுள்ள திமுக பொறுப்பாளர் மீது அக்கட்சி தலைமை உடனே உரிய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், "ரோம் நகரமே பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல்" திமுகவினர் கட்சிக்கூட்டம் நடத்திக்கொண்டும், விழா எடுத்துக்கொண்டும் இருப்பது வெட்கக்கேடானது. தமிழகத்தில் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது திமுக என்ற தீயசக்தி என்பதை எனது பேட்டிகள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். தமிழக மக்களும் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். தமிழக மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த திமுகவினர், இன்றைக்கு ஆட்சியை நடத்ததெரியாமல்,  தங்கள் கட்சியை மட்டும் வளர்த்து கொண்டிருக்கின்றனர். திமுகவினர் தங்கள் கட்சியினர் செய்யும் அராஜக செயல்கள், அத்துமீறல்கள் என எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமலும், அதனை கட்டுப்படுத்தவும் முடியாமல், ஆட்சியில் இருந்துகொண்டு, தமிழக மக்களை நாள்தோறும் கசக்கி பிழிந்து கொண்டு இருக்கிறார்கள்.

சசிகலா

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் கௌரவமாக இருந்தார்கள், சுதந்திரமாக செயல்பட்டனர். அரசியல்வாதிகளின் தலையீடு எந்த அரசு அதிகாரிகளுக்கும் இருந்தது கிடையாது. இதுபோன்ற நல்ல விசயங்களை திமுகவினர் என்றைக்கும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் இன்றைக்கு ஏழை, எளிய, சாமானிய மக்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அவலநிலை நிலவி வருகிறது. ஆனால் திமுக தலைமையிலான அரசோ இவர்களின் தோல்விகள், மக்கள் விரோத செயல்கள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக நாள்தோறும் மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத விசயங்களை பூதாகரமாக்கி, அது தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தி மக்களை ஏமாற்ற பார்க்கிறது. ஆனால் தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். திமுகவினர் போடும் பகல் வேஷங்களை இனிமேலும் மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழக மக்கள் திமுகவினருக்கு தக்க பாடம் கற்பிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு அதிகாரிகளை மிரட்டியுள்ள திமுக கட்சியை சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை, தமிழக முதலமைச்சர் உடனே  எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.