“ஒருங்கிணைந்த அதிமுகவே இலக்கு; அதை நோக்கியே பயணம்”- சசிகலா

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம், அந்த இலக்கை நோக்கியே நமது பயணம் என வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சசிகலா, “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம், அந்த இலக்கை நோக்கியே நமது பயணம். இதைத்தான் கழகத் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
எனக்கென்று யாரும் இல்லை, தமிழக மக்கள்தான் எனது குடும்பம். தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் எப்போதும் ஒலிக்கும். எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழிகொடுக்கும். உண்மை என்றும் தோற்காது என்ற நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி நிச்சயம். திமுகவினர் என்றாலே ரகளை செய்வது, அடாவடி செய்வது போன்ற வேலைகளை செய்வது என்பது வாடிக்கையானது. திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. சுய விளம்பரத்துக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னலம் கருதாமல் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்" என்றார்.