ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் - சசிகலா இரங்கல்

 
sasikala

அருணாச்சலபிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். 

அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் சங்கே கிராமத்தில் இருந்து  நேற்று காலை 9  மணியளவில் ராணுவ ஹெலிக்காப்டரில்  லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோர், அசாம் மாநிலம் சோனிப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.  ஆனால் புறப்பட்ட 15 நிமிடங்களில்  விமானிகள் உடனான தகவல் இணைப்பு தொடர்பை இழந்துள்ளது.  இதனையடுத்து  போம்டிலாவின் மேற்கே மண்டலா ஹில்ஸ் பகுதிக்கு அருகே ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.  ஹெலிகாப்டர்  விழுந்து நொறுங்கிய  அதே பகுதியில் 2 பைலட்டுகளின் உடலும் கண்டறியப்பட்டது. பனிமூட்டம் காரணமாக மலைமீது மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்தில் இறந்த விமானிகள் லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்பது  அடையாளம் காணப்பட்டது. இதில் மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டில் உள்ள தேடி மாவட்டத்தைச்  சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களது உடல்கள் டெல்லி விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:  அருணாச்சலப் பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த தேனி மாவட்டம் ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த மேஜர் ஜெயந்த் உள்பட இரண்டு விமானிகள் பலியாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பலியான விமானிகளின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உடன் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.