இசை உலகில் பவதாரிணியின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது - சசிகலா

 
sasikala

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசைஞானி இளையராஜா அவர்களின் மகள் பவதாரிணி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.  இசை உலகில் பவதாரிணி அவர்களின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். தனது தந்தையை போன்று இசைஞானம் கொண்ட பவதாரிணி அவர்கள் தமிழ் திரைப்படங்களில் சிறப்பான பல பாடல்களை பாடியிருக்கிறார். அதேபோன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில், திரைப்படங்களுக்கு இசையமைத்தும், தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். 'பாரதி' படத்தில் அவர் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்கு, தேசிய விருது பெற்று, அவரது தந்தைக்கும் பெருமை சேர்த்தவர்.


பவதாரிணி அவர்களை இழந்து வாடும் அவரது தந்தை இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும்  இசையுலக ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.