பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார்
ஆகாஷ் வானொலி “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி'' எனும் கம்பீர குரலால் வசீகரித்த பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

சரோஜ் நாராயணஸ்வாமியின் பூர்வீகம் தஞ்சாவூர். ஆனால் இவர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்தும் மும்பையில் தான். பிஏ ஆங்கிலம் முடித்த இவர் தமிழில் புலமை பெற்று திகழ்ந்தார். அதன்பிறகு திருமணம் முடிந்து வானொலி பணிக்காக டெல்லியில் குடியேறினார். பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்தார். 1962 முதல், 50 ஆண்டுகள், 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
வானொலி செய்தி வாசிப்பில் தனக்கென முத்திரை பதித்த தனி பாணியை அமைத்துக் கொண்டவர் சரோஜ் நாராயண சுவாமி. எந்த வார்த்தைகளுக்கு இடையே, இடைவெளி விட வேண்டும்; எந்த வார்த்தைக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து, குரல் கொடுத்தவர். தற்போதைய தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் முன்னோடியாக இருந்த வானொலியில் இவரது குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது. ஒலிபரப்புத்துறையில் அவர் பணியாற்றியதை பாராட்டி இவருக்கு 2009ல் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.


