“ஆதங்கத்துக்கு நிவர்த்தி கிடைக்கும்னு நம்புறேன்” - சரத்குமார்
என்னுடைய ஆதங்கத்துக்கு நிவர்த்தி கிடைக்கும்னு நம்புறேன் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் கூறியுள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைத்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பதவி ஏதும் வழங்கப்படவில்லை என்று நேற்று ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இது தொடர்பான கடிதத்தை சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அவரை, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் சந்தித்து வேண்டுகோள் கடிதம் வழங்கினார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், “நேற்று நடைபெற்ற கூட்டத்தின் அடிப்படையில் தங்களது வேண்டுகோளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தற்போது கடிதமாக கொடுத்துள்ளோம். பியூஸ் கோயல் விமான நிலையத்திற்கு வருவதற்காக இவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் இது தொடர்பாக தொடர்ந்து பேசுவோம். இன்று நான் கோயம்புத்தூர் செல்கின்றேன், என்னை அழைத்தால் பியூஸ் கோயலை சந்திப்பேன். திருப்தியோட தான் வந்து தற்போது கடிதம் கொடுத்துவிட்டு செல்கின்றேன். நீங்கள் சொல்வதெல்லாம் நியாயம் தான், நான் அதை பரிசீலனை செய்கின்றேன் என்று தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லிருக்கிறார். ஏற்கனவே ஆதங்கம் என்று சொல்லியாச்சு,அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கின்றது” என்று கூறினார்.

