தீபாவளித் திருநாளில் வேதனைகளும், சோதனைகளும் விலகிட சரத்குமார் வாழ்த்து
இருள் நீக்கி, ஒளி பரவச் செய்யும் தீபாவளித் திருநாளில் மக்களின் வாழ்வில் சந்திக்கும் வேதனைகளும், சோதனைகளும் விலகி, நன்மைகள் பெருகிட வாழ்த்துவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இருள் நீக்கி, ஒளி பரவச் செய்யும் தீபாவளித் திருநாளில் மக்களின் வாழ்வில் சந்திக்கும் வேதனைகளும், சோதனைகளும் விலகி, நன்மைகள் பெருகிட வாழ்த்துகிறேன். மது மற்றும் போதை எனும் அரக்கன் நவீன நரகாசுரனாக இன்றைய சமூகத்தை சீர்குலைத்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்காமல் முற்றிலுமாக ஒழிக்கும் நன்னாளை தீபாவளியாக கொண்டாடுவோம்.
இந்த இனிய நாளில் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து, சுற்றத்தார், நண்பர்களுடன் இனிப்புகள், பரிசுகளை பகிர்ந்து, உறவுகளுடன் இணைந்து பண்டிகையை ஆண்டுதோறும் இந்திய மக்களாகிய நாம் உற்சாகமாக கொண்டாடி வருகிறோம். சாதி, மத, இன, மொழி, பேதங்கள் கடந்து, இந்திய மக்கள் மனதில் சமத்துவம் என்னும் புனித எண்ணம் தழைத்தோங்கட்டும். எளியவர்க்கான தேவையும், உழைப்புக்கேற்ற ஊதியமும், உரிமையும் கிடைக்கப்பெற்று, எல்லாரும் எல்லாமும் பெறும் நிலைக்கு உயர உறுதியுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.
உயர்ந்த சிந்தனைகளுடன், அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வாழ்த்தி, உலகெங்கும் வாழும் இந்திய மக்களுக்கு என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.