மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவு - வைகோ இரங்கல்

 
vaiko

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய விடுதலை போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம், விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கான போராட்டம் என வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்தில் நின்று போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்கள் இன்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு ஆறாத் துயரம் அடைந்தேன்.

நேற்று முன்தினம் (13.11.2023) மருத்துவமனையில் அவரை சந்தித்து தோழர்களிடமும், குடும்பத்தினர்களிடமும் நலன் விசாரித்தபோது, எப்படியும் அவர் பிழைத்துக் கொள்வார். நீண்ட காலம் நம்மோடு வாழ்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் எதிர்பாராத வகையில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவராக அவர் விளங்கியபோது, ஆதிக்க இந்தியை எதிர்த்து களமாடினார். தொடர்ந்து மதுரையில் உருவான மாணவர் சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்று மொழிக்காகவும், நாட்டுக்காகவும் தொடர்ந்து போராடினார்.

vaiko ttn

1941 ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கன் கல்லூரியில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது படிப்பு தொடர முடியாமல் போனது.

கம்யூனிஸ்ட் கட்சியில் தொடக்க காலம் முதலே தொண்டாற்றிய சங்கரய்யா அவர்கள் கட்சி தடை செய்யப்பட்டபோது இரண்டு ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டு கட்சிப் பணியாற்றினார். எட்டு ஆண்டு காலம் தன் பொதுவாழ்க்கையில் சிறையில் அடக்குமுறைக்கு ஆளாகி தியாகச் சரித்திரம் படைத்தவர் சங்கரய்யா.

1964 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது கட்சியின் மாநிலக் குழுவில் இடம்பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தீக்கதிர் நாளிதழின் ஆசிரியராகவும் சங்கரய்யா பணியாற்றினார்.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியின் சட்டமன்றத் துணைத் தலைவராகவும் சங்கரய்யா பணியாற்றினார். அதே ஆண்டில் திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் சங்கத்தின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக பணியாற்றினார்.

1986 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 ஆவது மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

tn

கடலூரில் 1995 ஆம் ஆண்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழ் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யா அவர்கள் மறுமலர்ச்சி தி.மு.கழகத்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

2021 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ என்ற விருதை தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தியபோது, விருதுடன் சேர்த்து வழங்கிய பத்து லட்சம் ரூபாய் நிதியினை முதல்வரின் கோவிட் நிவாரண நிதிக்கு வழங்கினார் சங்கரய்யா. இதனைப்போலவே 1972 ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான  நிதியை அரசு வழங்கியபோது, ‘நாட்டு விடுதலைக்காக நாங்கள் போராடினோம். பென்சன் தொகைக்காக அல்ல’ என்று குறிப்பிட்டு அதனையும் அரசுக்கே திருப்பி வழங்கினார்.

இத்தகைய பல்வேறு சிறப்புக்களின் கொள்கலனாக திகழ்ந்த பெருமைக்குரிய இலட்சியப் போராளியான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். ஜனநாயகம் காக்கவும், மதச்சார்பின்மை மதநல்லிணக்கம் பேணவும், தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கவும் களத்தில் நிற்கும் அனைவருக்கும் நாடு முழுக்க உள்ள தோழர்களுக்கும் போராளித் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிரிவு அளவு கடந்த துயரத்தை அளிக்கிறது. அவரது பிரிவால் துயரம் அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.