தோழர் சங்கரய்யா மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல்!!

 
eps

மறைந்த தோழர் சங்கரய்யா மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தியாகி திரு. N. சங்கரய்யா அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் பேரன்பைப் பெற்ற திரு. சங்கரய்யா அவர்கள், விடுதலைப் போராட்டத்திற்காக தனது கல்லூரிப் படிப்பை துறந்ததோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராகவும், மாணவர் அமைப்பு முதல் வயது முதிர்வு வரையிலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்.

tn

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், மத்தியக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய திரு. சங்கரய்யா அவர்கள், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்கள் பணியாற்றி உள்ளார். மேலும், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், நீண்ட காலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும் விளங்கியவர். மேலும் சாதி வர்க்கம், ஆதிக்கம், அடக்குமுறைகளை தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வாழ்ந்தவர்.

tn

தியாகி சங்கரய்யா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும், தோழர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.