சனாதனத்தை வீழ்த்த வேண்டும்! - திருமாவளவன் கருத்தால் தமிழக அரசியலில் புதிய சர்ச்சை..!
மதுரை தமுக்கம் திடலில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் தமிழ்நாட்டு பண்பாட்டு பெருவிழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய திருமாவளவன், தற்போது தமிழகத்தில் வலதுசாரிகள் வளா்ந்து வருவதாகவும் வலுப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். தன்னுடைய இக்கூற்றுக்கு மாநிலத்தில் அரங்கேறும் ஆணவக் கொலைகள்தான் சான்றுகள் என்றார் அவர்.
வலதுசாரி அரசியல் என்பது பழைமைவாதத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் என்றும் ஆணவக் கொலைகள் அதிகரிப்பதற்கு வலதுசாரி அரசியல்தான் முக்கியக் காரணம் என்றும் திருமாவளவன் சாடினார்.
சாதி அடையாளத்தை மாற்ற வேண்டும் எனில் மனுதர்மக் கொள்கைளையும் சனாதனத்தையும் வீழ்த்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழக் கூடாது என நினைப்பவர்கள் வலதுசாரிகள் என விமர்சித்தார்.
“அத்தகையவர்கள் அம்பேத்கரை தலைவர் இல்லை எனச் சொல்கின்றனர். இத்தகைய வலதுசாரி சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
“நாம் அனைவரும் தமிழர் எனச் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் தமிழர்களாக வாழவில்லை. சாதியாகவே பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம்,” என்றார் திருமாவளவன்.
அறிவியல் வளா்ந்த நூற்றாண்டிலும் சாதியின் பிடியிலிருந்து மீளமுடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், சாதி அடையாளத்தோடு வாழும் வகையில் பெரும்பாலானோரின் வாழ்வு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

