"மிஷ்கினுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்"- சமுத்திரக்கனி

நந்தா பெரியசாமி இயக்கத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, அனன்யா நடித்து வெளியான திரு.மாணிக்கம் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “இப்படி ஒரு நல்ல கதையை எனக்கு சொன்னதுக்கு இயக்குனருக்கு நன்றி. ஜீ 5 ஓடிடி தளத்திற்கு மிக்க நன்றி. இப்படம் பொருளாதார ரீதியாக பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை. இந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான். தயாரிப்பாளரின் நேர்மையும் உண்மையும் உங்களை கைவிடாது. குறிப்பாக நான் பிடித்த கையை விடமாட்டேன். கூடவே இருப்பேன் தைரியமாக இருங்கள்.
இப்படத்தின் வெளியீட்டில் தவறு நடந்துவிட்டது. படத்தை வெளியிடுவதில் உள்ள அழுத்தம், மிகப் பெரிய பயமுறுத்தல்தான் இப்படத்தை கொன்றுவிட்டது. படத்தை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் இப்படம் வெளியானது என்றே தெரியவில்லை. அந்தளவுக்கு குழப்பம் நடந்துவிட்டது. அடுத்தமுறை இதே தவறு செய்துவிடக்கூடாது என்று சொல்லி அப்பா படம் முதல் தற்போது வரை இந்த தப்பு தொடர்கிறது. எப்போது சரியாகும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் அடிகள், வலிகள் தான். ஆனால் படைப்பு நன்றாக உள்ளது. உண்மையாக இருப்பவர்களை சினிமா என்றும் விடாது. படம் எடுக்கும் போது உள்ள மகிழ்ச்சி வெளியிடும்போது இல்லை. சினிமா எங்களை காப்பாற்றும் என்று நம்புகிறோம். கண்டிப்பாக சினிமா எங்களை காப்பாற்றும். இப்படம் தெலுங்கில் ஒரு மேஜிக் செய்யும்” என்று பேசினார்.
இளையராஜா குறித்து மிஷ்கின் பேசியது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சமுத்திரக்கனி, அதான் அவர் மன்னிப்பு கேட்டுட்டாருல்ல. மிஷ்கின் பேசியது அன்பின் வெளிப்பாடே தவிர நான் அதனை தவறாக பார்க்கவில்லை. மூளை கொஞ்சம் அதிகமாக உள்ளவன் பேசினால் என்ன செய்வீங்க அதனை அப்படித்தான் எடுத்துக்கனும். அன்பின் வெளிப்பாடு அது. அவர் பேசியது தவறு என்று நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அவரைபற்றி புரிந்தவர்களுக்கு தெரியும் அவர் யார் என்று புரியாதவர்களுக்குத்தான் இந்த மன்னிப்பு. அவருக்காக நானும் உங்கள் காலைத் தொட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.