சாம்சங் தொழிலாளர் வேலைநிறுத்தம் : முதல்வர் தலையிட வலியுறுத்தி அக்.5-ல் சென்னையில் போராட்டம்..!

 
1

 சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) சார்பில் சென்னையில் வரும் அக்.5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4-வது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 1500 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த வேலை நிறுத்தம் முடிவு காண வேண்டுமெனில் தமிழக அரசு மேலும் கூடுதல் தலையீடு செய்து, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. தொழிலாளர் துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு 5 முறை பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. ஆனால், உடன்பாடு எதுவும் காணப்பட வில்லை.

தொழிலாளர் கோரிக்கைகளான, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். தொழிற்சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி நிறுவனம் சுமூகத் தீர்வு காண வேண்டும். இவை இரண்டும் அடிப்படை உரிமைகள் சம்மந்தப்பட்டதாகும். அடிப்படை உரிமைகளுக்காக, வேலைநிறுத்தம் நீடிப்பது, கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் தங்களுடைய தொழிலாளர் விரோத அணுகுமுறை தொடர்வதையேக் காட்டுகிறது.

அமைதியான முறையில் போராடி வரும் தொழிலாளர்களையும், தொழிற்சங்க தலைவர்களையும் அச்சுறுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னையில் அனைத்து தொழிற்சங்கத்தினரின் கூட்டு போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி மறுத்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் கைது செய்துள்ளதானது சாம்சங் நிறுவனத்தின் அடக்குமுறை கருவியாக காவல்துறை மாறியுள்ளதை காட்டுகிறது.

வழக்கம் போல் தொழிலாளர் துறை, தொழிற்சங்கத்தை பதிவு செய்ய மறுப்பதும், காவல்துறை தலையீடுகளும் அரசின் கொள்கையை மீறி செயல்படுகிறதா என்ற கேள்விகள் எழுகிறது.

எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர் துறை இதுவரை கடைபிடித்த தொழிற்சங்க பதிவு நடவடிக்கையை போல், விண்ணப்பித்து 100 நாள்களுக்கு மேலாகிவிட்ட சாம்சங் தொழிலாளர் சங்கத்தை தாமதமின்றி பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் வழங்கிடுமாறும், தொழிலாளர் கோரிக்கைகள் குறித்து தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொழிலாளர் துறையில் நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதலமைச்சர் தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல் ) லிபரேசன் சார்பில் அக்.5-ம் தேதி அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.