பணி நீக்கத்தை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் 17-வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாம்சங் இந்தியா நிறுவனம். இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் 17 பேரை தொழிற்சாலை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்கள் தொடர்ந்து 17 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று ஒரகடம் மேம்பாலம் அருகே சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும், அதே நேரத்தில் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை வாபஸ் பெற வேண்டும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக செயல்படும் தொழிலாளர் நல அலுவலர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் விரைவாக தீர்வு காணாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் தீவிரமடையும் எனவும் கூறப்பட்டது
இதனைத் தொடர்ந்து பேசிய சிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன், “தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் போராட்டம் நடத்திய போது எந்தவித அசம்பாவித செயலிலும் எந்தவித உபகரணங்களுக்கும் சேதம் விளைவிக்கவில்லை என்பது அனைவரும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்ட நிலையில் தொழிலாளர்களை பணியிடம் நீக்கம் செய்வது தவறு, அதே வேளையில் போட்டி சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வதுக்கான ஆதாரங்கள் இருப்பதால் தொழிலாளர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் பதில் கூற வேண்டும். மேலும் தொழிலாளர் நல அலுவலர் மீதும் அரசு உத்தரவை மதிக்காத தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுத்து உடனடியாக அரசு இதற்கு தீர்வு காண வேண்டும்” எனக் கூறினார்.