தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கெடேஷ் கைது..!
கரூர் சம்பவத்தை தீவிரமாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவானது அமைக்கப்பட்டு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இந்த சிறப்பு விசாரணைக் குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தேடி வருகின்றனர். 10 நாட்களாக தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் தேடும் பணி துரிதபடுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் முன்ஜாமின் கோரிய மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில், தவெக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்குதல் விவகாரத்தில் வெங்கெடேஷ் தான் தாக்கியுள்ளார் என்பது SIT விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் பிரசார பரப்புரை நடைபெற்ற நாளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மயக்கமடைந்த மக்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர். அப்போது, ஆம்புலன்ஸ்கள் வேகமாக இயக்கப்பட்டதாக தவெக நிர்வாகிகள் வாகனங்களை நிறுத்தி விசாரித்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் சமாதானம் செய்வதற்காக உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஏற்கெனவே காவலில் உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் நீதிமன்றமானது மதியழகனை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.


