ஆடிப்பெருக்கை முன்னிட்டு களைகட்டிய ஆடுகள் விற்பனை..

ஆடிபெருக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆட்டுச்சந்தைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை ( ஆகஸ்ட் 3 - சனிக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஆட்டுச் சந்தைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆடு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆடு சந்தையில் வேப்பூர், சேப்பாக்கம், கண்டப்பங்குறிச்சி, நல்லூர், அரியநாச்சி, அடரி, சிறுபாக்கம், திட்டக்குடி, ராமநத்தம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து விவசாயிகள் தங்களது ஆடுகளை இந்த வேப்பூர் ஆடு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருவர்.
இந்த நிலையில் ஆடி பெருக்குவிழாவை முன்னிட்டு நேற்று இரவு வேப்பூர் ஆட்டு சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, கொடி ஆடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதேபொல் இந்த ஆடுகளை வாங்குவதற்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, சேலம், ராமநாதபுரம் , புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். நேற்று இரவில் இருந்து நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஆட்டுச் சந்தைக்கு இந்த முறை வழக்கத்தைவிட வெள்ளாடு மற்றும் கொடி ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை என்பதால் ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆடுகளின் விலை சற்று குறைந்திருந்ததால், இறைச்சிக்காக ஆடு வாங்க வந்திருந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவாச்சூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.