ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு அதிரடி தடை! - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பாலை வினியோகிக்க பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு பதிலாக மாற்று வழியை கண்டறிய உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, ஆவின் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆவின் பால் விநியோகத்துக்கு மீண்டும் தானியங்கி விற்பனை இயந்திரத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், சோதனை அடிப்படையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி நகரங்களில் மக்கள்தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில் இந்த இயந்திரங்களை அமைக்க இருப்பதாகவும்’ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஆக. 28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொடைக்கானலில் முதல் இரண்டு நாட்களில் 40 லிட்டர் அளவுக்கு பால் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஊட்டியில் 6 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையில் இருந்து தானியங்கி பால் விற்பனை இயந்திரம் குறித்து முறையாக விளம்பரங்கள் செய்யப்படவில்லை என தெரியவருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், போதுமான விளம்பரங்களைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், தானியங்கி பால் விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாக்கெட் மூலம் பால் விற்பனை செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டதுடன், தனியார் பால் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

