சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்..

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய நீதிபதி நியமனம்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை அடுத்து, அவருக்கு அடுத்த இடத்தில் மூத்த நீதிபதியாக இருந்த துரைசாமி பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் சில நாட்களில் ஓய்வு பெற்றதையடுத்து அதற்கு அடுத்த பொறுப்பில் இருந்த மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெற உள்ளார்.
இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இரண்டாவது இடத்தில் இருக்கக்கூடிய எஸ். வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். மே 25 ஆம் தேதி அதாவது நாளை முதல் அவர் தலைமை நீதிபதியாக பொறுப்புகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியநாதன் கடந்த 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூரில் பிறந்தவர். பள்ளி மற்றும் சட்டப்படிப்பை சென்னையில் முடித்த, அவர் 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இன் நிலையில் மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரை மீது மதிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை அடுத்து தான் தற்போது வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.