அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதமா? - அரசு விளக்கம்
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இவ்வாண்டு (2026-27) 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தவெக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் என்பது பட்டியலின மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க உதவும் மிகச்சிறந்த உதவித்தொகை திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அயல் நாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மாணவர்கள் கல்விக் கட்டணம், ஆராய்ச்சி செலவு மற்றும் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சில பெற்றோர்கள் தங்களுடைய நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் பிள்ளைகளின் படிப்பைக் காப்பாற்றப் போராடி வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தவெக அரசு, "அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இவ்வாண்டு (2026-27) 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 165 மாணவர்கள் தாங்கள் சேர்க்கை பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 201 மாணவர்கள் ஜனவரி / மார்ச் 2027-க்குள் சேர உள்ளனர். உயர்கல்வி சேர்க்கை பெற்ற 165 மாணவர்களில் 140 பேர் சேர்க்கை விவரங்கள் மற்றும் பல்கலைக்கழகக் நிதிகேட்பு விவரங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் 84 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.30.24 கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன. இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்காத 25 மாணவர்களை விரைவில் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளது.

