வேட்பாளர் அறிவிப்பு குறித்து பரவும் தகவல்கள் உண்மையில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக வெற்றிக் கழகம்..!

 
1 1

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.இதனிடையே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேவேளை, சில தொகுதிகளுக்கு த.வெ.க. வேட்பாளர்கள் இன்று அறிமுக செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல் பரவின.


இந்நிலையில், த.வெ.க. வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என்று தமிழக வெற்றிக் கழக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக த.வெ.க. வெளியிட்ட அறிவிப்பில், வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் தலைவர். அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.