இன்று முதல் வங்கிகளில் புதிய வாரிசு நியமன விதிகள் அமல்..!
வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் செய்யமுடியும். ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் குறிப்பிட்ட பங்குதொகை வழங்குவதற்கேற்ப அதற்கான விகிதாசாரத்தை நிர்ணயம் செய்யமுடியும். நிரந்தர வைப்புதொகை கணக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப வாரிசுதாரர்களை நியமிக்க முடியும்.
தங்கநகைகள் மற்றும் ஆபரணங்களை வங்கிகளில் (Gold Lockers) பாதுகாப்பாக வைப்பதற்கான பெட்டக வசதி கொண்ட வாடிக்கையாளர்களும் வாரிசுதாரர்களை நியமிக்க முடியும். வாடிக்கையாளர் மரணம் அடையும் பட்சத்தில் வாரிசுதாரர்களில் முதன்மையானவர் பாதுகாப்பு பெட்டக வசதியை செயல்படுத்தமுடியும். வங்கி வாரிசுதாரர் நியமன விதிமுறைகள் 2025-ன்படி, வாரிசுதாரர்களை நியமனம் செய்வதற்கோ அல்லது நீக்குவதற்கான விரிவான நடைமுறைகள் மற்றும் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் செயல்பாட்டிற்கு வருகிறது.
குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க கட்டணம் இலவசம்: பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் விவரங்களை எந்த ஒரு ஆதார் சேவை மையம் அல்லது நியமிக்கப்பட்ட ஆதார் மையத்திலும் இலவசமாக புதுப்பிக்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. 5 வயது முதல் 7 வயது வரையிலான உங்கள் குழந்தையின் ஆதார் பயோமெட்ரிக்ஸை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு குழந்தை ஐந்து வயதை அடையும் போது, கைரேகைகள், கருவிழி, புகைப்படம் ஆகியவை அவரது ஆதாரில் கட்டாயமாகப் புதுப்பிக்கப்பட வேண்டும். இது முதலாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (Mandatory Biometric Updates) என்று அழைக்கப்படுகிறது. ஐந்து வயது முதல் ஏழு வயது வரையிலான காலகட்டத்தில் குழந்தையின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு கட்டணம் ஏதுமில்லை. ஆனால் ஏழு வயதுக்குப் பிறகு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 75 ரூபாய் மட்டுமே ஆகும். 7 வயதுக்குப் பிறகும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யப்படாவிட்டால், தற்போதுள்ள விதிகளின்படி, ஆதார் எண் செயலிழக்கப்படலாம்
மத்திய/ மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஏதுவாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நவமபர் மாதத்துக்குள் ஒருவேளை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காத பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படக் கூடிய சூழல் எழலாம். இதற்காக மத்திய ஓய்வூதியங்கள் அமைச்சகம் நாடு முழுவதும் நாடு முழுவதும் 1,800-க்கும் கூடுதலான மாவட்டங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் (2,500 இடங்களில்) நவம்பர் 1 முதல் 30 வரை இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் நடத்தப்பட உள்ளது. அதேபோன்று, நவம்பர் மாதத்துக்குள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து ஒன்றிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த நவம்பர் மாதம் முதல் தங்களது வாடிக்கையாளர்கள், மூன்றாம் தரப்பு செயலிகள் (CRED, Cheq, Mobiwiki) மூலம் கல்வி கட்டணங்களை செலுத்தும் போது, 1% சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல, Bank Wallet -க்கு ரூ.1,000க்கும் அதிகமான தொகை ரீசார்ஜ் செய்யும் பரிவர்த்தனைகளுக்கும் 1% சேவை கட்டணம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


