ஆர்.எஸ்.எஸ். பேரணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..

 
supreme court supreme court

ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.  

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க  வேண்டும் என நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட  நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளித்து  உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் உயர்நீதிமன்றத்தில் மொத்தம்  45 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, “பொதுச்சாலைகளில் பேரணி நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை;  இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது.

rss

சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர். அத்துடன்,  சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் பேரணி நடத்த வேண்டும் என்ற உத்தரவையும்  ரத்து செய்த நீதிபதிகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படி உத்தரவிட்டனர். மேலும்,  3 தேதிகளை குறிப்பிட்டு பேரணிக்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பிக்கும்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் , இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் மனுவில், “கருத்துரிமை, பொது இடத்தில் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு பொதுநலன் கருதி நியாயமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டிருந்தது.

tn assembly

முன்னதாக  இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, “தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால் வீதிதோறும் பேரணியை அனுமதிக்க முடியாது; சுற்றுச்சுவருக்குள், விளையாட்டு அரங்கம் போன்றவற்றில் நடத்துவதற்கு அனுமதி வழங்குகிறோம்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதனை ஏற்றுதான் உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்றும், ஆனால் இரு நீதிபதிகள் அமர்வு விருப்பப்படும் இடங்களில்  பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  

ஆர்.எஸ்.எஸ் பேரணி மார்ச் 5-ந் தேதி நடைபெற உள்ளது என்பதால்,  தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும்  முறையிட்டார். அதை ஏற்ற உச்சநீதிமன்றம்  ,  ஆர்.எஸ்.எஸ். பேரணி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை இன்று ( மார்ச் 3-ந் தேதி )  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது. அதன்படி ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.