“பெரியார் கவுன்சிலர் ஆக வேண்டும் என்று கூட ஆசைப்படவில்லை” - ஆர்.எஸ்.பாரதி

திமுக காரர்களை எப்படி வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள், ஆனால் பெரியாரை திட்டலாமா? பெரியாரை திட்டியவர்கள் யாராயிருந்தாலும் செருப்பால் அடிக்காமல் விடக்கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று இரவு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தில் இன்று ஏராளமானோர் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவும் இருப்பதற்கு மூல காரணம் கல்வியில் கலைஞர் கொண்டு வந்த சீர்திருத்தமே. கலைஞர் தான் செமஸ்டர் முறையை கொண்டு வந்தார். முன்பு ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அந்த ஆண்டு அனைத்து பாடங்களிலும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை இருந்தது. இதனை மாற்றி எந்த பாடத்தில் தோல்வி அடைந்தார்களோ... அந்த ஒரு பாடத்தை மட்டும் எழுதினால் போதும் என்று சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். அதனால் இன்று தமிழகத்தில் ஏராளமானோர் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவும் உள்ளனர்.இவர்களெல்லாம் இந்தி படித்தா? வந்தார்கள். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இரு மொழி கொள்கையினால்தான் இவர்கள் எல்லாம் படித்தார்கள். சந்திர மண்டலம் சென்ற நான்கு விஞ்ஞானிகள் கல்லையும், மண்ணையும் கொண்டு வந்தார்களே அவர்கள் என்ன இந்தி படித்தா சந்திர மண்டலம் சென்றார்கள்.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையில் படித்தவர்கள் தான் உலகத்திற்கு வழிகாட்டுபவர்களாகவும் உள்ளார்கள். திமுகக்காரர்களை திட்டுங்கள் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் பெரியாரை திட்டியவர்களை சும்மா விடலாமா? யாராக இருந்தாலும் செருப்பால் அடிக்காமல் விடக்கூடாது. பெரியார் இல்லாவிட்டால் நாம் மேடை போட்டு பேச முடியுமா? பெரியார் கவுன்சிலர் கிடையாது. எம்எல்ஏ கிடையாது எம்பி கிடையாது. ஆனால் அவரால்தான் நாம் இந்த உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது. பெரியார் கவுன்சிலர் ஆக வேண்டும் என்று கூட ஆசைப்படவில்லை. மாணவர்களுக்கு திராவிட இயக்க சிந்தனைகள் குறித்து பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் இளைய தலைமுறையினருக்கு பெரியாரைப் பற்றி தெரிய வரும். இன்று மாணவர்களையும், இளைஞர்களையும் வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் உள்ளார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் ஒரே ஒரு வார்த்தை தான் பேசினார். சனாதனம் என்று ஒன்றை பேசினார், இந்தியா முழுவதும் இவர் மீது 1100 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவர் தனது தாத்தாவைப் போல் எதையும் சமாளித்து வெற்றி பெறுவார்” என்றார்.