பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி செலவில் பல்வேறு முடிவுற்ற திட்டங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு

 
tn

பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி செலவில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.11.2023) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறை சார்பில் 2 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் ஈரோட்டில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு சேமிப்புக் கிடங்கு, திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவியின் மூலம் 1 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் மகளிர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலையக் கட்டடங்கள், தருமபுரியில் 2 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் அலுவலகத்துடன் கூடிய பால் கொள்முதல் பிரிவுக் கட்டடம், திருவண்ணாமலையில் பால் பவுடர் ஆலையில் 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்புக் கிடங்கு, திருப்பூரில் 3 கோடி ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டப் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கான அலுவலகக் கட்டடம், என மொத்தம் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.

tn

ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,578 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்று அடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சராசரியாக 33 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து தனது 4 இலட்சம் உற்பத்தியாளர்கள் மூலம் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பெற்று, சிறப்பாக செயலாற்றி வருகிறது.

ஈரோட்டில் கால்நடை தீவன சேமிப்புக் கிடங்கு

ஈரோடு மாவட்டத்தில் தீவன உற்பத்தி திறன் தற்போது நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக தரம் உயர்த்தப்பட்டு, கால்நடை தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எனவே அதிகரித்துள்ள உற்பத்திக்கான மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட தீவனத்தினை சேமித்து வைப்பதற்காகவும், தரமான கால்நடை தீவனத்தை வழங்கி பால் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு; திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தி கூட்டுறவு ஒன்றிய பயிற்சி நிலையம்
திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தி கூட்டுறவு ஒன்றியத்தில் 1996- ஆம் ஆண்டு முதல் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடம் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளதால் பால் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளிக்க இயலாத நிலை இருந்து வருகிறது. மகளிர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவி திட்டத்தின் கீழ், 1 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகளிருக்கான நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலையக் கட்டடம்;

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகக்கட்டடம்

tn

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகஸ்ட் 2019 அன்று முதல் கிருஷ்ணகிரி ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தனியே அலுவலகக் கட்டடம் இல்லாததால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ் தருமபுரியில் 2 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் பால் கொள்முதல் பிரிவு கட்டடம்;

திருவண்ணாமலை பால் பவுடர் ஆலையில் சேமிப்புக் கிடங்கு

stalin

திருவண்ணாமலை பால் பவுடர் ஆலையில் நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் பால் பவுடர் உற்பத்தி திறனில் மாவட்ட ஒன்றியங்களின் உபரிப் பாலை உருமாற்றம் செய்து சேமித்து வைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தற்போது 1500 மெட்ரிக் டன் கிடங்கு உள்ளது. அதிக உற்பத்தி காலத்தில் கிடங்கின் கொள்ளளவு போக மாவட்ட ஒன்றியங்கள் தங்களின் பால் பவுடரை தனியார் மற்றும் இதர சேமிப்புக் கிடங்குகளில் வாடகைக்கு வைத்துள்ளதால் கூடுதல் செலவீனம் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் நிதியின் மூலம் 2 கோடியே 93 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கு;

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகக் கட்டடம்

stalin
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் டிசம்பர் 2018 அன்று முதல் ஈரோடு ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தனியே அலுவலகக் கட்டடம் இல்லாததால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 3 கோடி ரூபாய் செலவில் திருப்பூரில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; என மொத்தம் 12 கோடி ரூபாய் செலவில் பால்வளத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.