அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது - ஆர்.எஸ்.பாரதி

 
rs bharathi

அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை எனவும், சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை எனவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். 

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதனையடுத்து விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது:  நான் அரசியலுக்கு வந்தபோது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்கமாட்டார். ஆனால் இப்போது அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது .  திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு வேப்பம் காயாக கசக்கிறது. ஆகையால் தான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார். திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆரியர்களுக்கு எதிரான ஆட்சி. 

அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை. இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அண்ணாமலை சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை. ஜெயலலிதாவின் ஆளுமையை, அண்ணமாலை அவருடைய தாய், மனைவியுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை மிரட்டலாம் என்று பார்க்கிறார். நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.