“நாங்க போட்ட நாடகத்துல நீ காமெடியனா? வில்லனா?”- ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

நாலு மணிநேர கூட்டத்தில் அமர்ந்து தனது கருத்தையும் சொல்லி, திருத்ததையும் சொன்ன அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே வந்து செய்தியாளர்களிடம் “நாடகம் ஆடினார்” என்று சொல்லி இருக்கியே... அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நீங்கள் ”அந்நாடகத்தில் நீ வில்லன் வேஷம் போட்டீர்களா? இல்ல… காமெடி வேஷம் போட்டீர்களா…? என அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரம், 2வது பகுதிக் கழகத்தின் ஏற்பாட்டில் “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளினை“ முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கூட்டப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள 63 தமிழக அரசியல் கட்சிகளுக்கு அரசின் சார்பில் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்திய வரலாற்றிலேயே இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். திமுக சார்பில் நானும், எம்.பி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டோம். இக்கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் என்னை முதன்முதலாக உரையாற்ற அழைத்தார். காரணம், நான் சுருக்கமாக பேசுவேன் என்கிற காரணத்தால், அழைத்தார். நானும் ரத்தின சுருக்கமாக பேசிவிட்டு அமர்ந்தேன். மு.க.ஸ்டாலின் உரையாற்றி முடித்தவுடன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயக்குமார், இதில் சிறிய திருத்தம் செய்யணும்னு கோரிக்கை வைத்தார். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் சொல்வதை கேட்பதா..? என்று ஈகோ பார்க்காமல் - சொல்வது அதிமுக கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் என்று கௌரவம் பார்க்காமல், தமிழ் மக்களுக்கும் – தமிழ்நாட்டுக்கும் எது நன்மை பயக்கும் என்ற ஒரே உயரிய கொள்கையை மனதில் நிறுத்தி, உடனடியாக அரசு தலைமைச் செயலாளரை அழைத்து, ஜெயக்குமார் சொன்ன வார்த்தையை சேர்த்து, திருத்தி கொண்டு வாருங்கள் என்று சொல்லி, திருத்தியதை கூட்டத்தில் வைத்து எல்லாக் கட்சி பிரதிநிதிகளின் ஒப்புதலையும் பெற்ற பெருந்தன்மைமிக்க – ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயக்குமார் பேசி, திருத்தத்தையும் சொல்லி அதனை மு.க.ஸ்டாலின் ஏற்று, திருத்திய தீர்மானத்தை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற்ற பின்னர், வெளியே வந்த அதிமுக ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திப்பின்போது “நாடகம் ஆடினார்” என்று பேட்டி அளித்திருக்கிறார். நான்கரை மணிநேரம் கூட்டத்தில் அமர்ந்து தனது மற்றும் தனது கட்சியின் கருத்தையும் சொல்லி, திருத்ததையும் சொல்லிட்டு, வெளியே வந்து “நாடகம் ஆடினார்” சொல்லி இருக்கிற ஜெயக்குமாரை, இக்கூட்டத்தில் வாயிலாக கேட்கிறேன். நாங்கள் நாடகம் ஆடினோம் என்றால் ”அந்நாடகத்தில் நீ வில்லன் வேஷம் போட்டியா..?” இல்ல ”காமெடி வேஷம் போட்டியா…?” என்று கேட்கிறேன். நாலு மணிநேரம் கூட்டத்தில் அமர்ந்து, பேசிவிட்டு, சிரித்துவிட்டு, வெளியே வந்து “நாடகம் ஆடினார்கள்” என்றால் அந்த டிராமாவில் நீ வில்லனாக நடித்தாயா…? இல்ல… காமெடியனாக நடித்தாயா…?” கேட்பேனா இல்லையா….? என்று நான் கேட்கமாட்டேனா.”” என்று கேள்வி எழுப்பினார்.