தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “மொத்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 6626 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, மோடி தலைமையிலான ஆட்சியில் 39,217 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மொத்த பட்ஜெட்டில் 1 லட்சத்து 16ஆயிரம் கோடி பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாடுக்காக ஒதுக்கப்படும்.வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை ஓட்டம் முடிந்தது. விரைவில் ரயில் இயக்கம் தொடங்கும். அனைத்து மாநில அரசுகளும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி தருவதை விரைந்து செயல்படுத்தவேண்டும். ரயில்வே திட்டங்கள் முடிவடைய நீண்ட காலம் எடுக்கும். எவ்வளவு சீக்கிரம் நிலம் கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் ரயில் திட்டங்கள் முடிவடையும். இந்தியாவில் எந்த ரயில்வே திட்டத்திற்கும் நிதி இல்லை என்ற சூழ்நிலை இல்லை.
ரயில்வே திட்டத்திற்கு நிதி இல்லை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவுற்றது. நாட்டின் தலை சிறந்த பொறியாளர்கள் மூலம் புதிய பாம்பன் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் பிரசித்திபெற்ற ரயில்வே பாலம் பாம்பனில் உள்ளது. தனுஷ்கோடி - ராமேஸ்வரம் திட்டம் வேண்டாம் என கூறியது தமிழ்நாடு அரசு தான். ஒன்றிய அரசு அந்த திட்டத்தை கைவிடவில்லை, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜூலை முதல் நவம்பர் வரை 40000 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 50 நமோ பாரத் ரயில்கள், 100 அம்ரித் பாரத் ரயில்கள், 200 வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. குறுகிய தொலைவுக்குள் இருக்கும் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் ரயில்கள் ஏ.சி மற்றும் ஏ.சி அல்லாத ரயில்பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 8 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது” என்றார்.