ரூ.60 லட்சம் ரொக்கம், 50 சவரன் நகைகள், சொகுசு கார்: திமுக பிரதிநிதியின் பிரம்மாண்ட காதுகுத்து சீர்வரிசை!
திமுக மாவட்டப் பிரதிநிதி கோகுல், தனது சகோதரியின் 10 வயது மகளின் காதுகுத்து விழாவிற்காக ரூ.60 லட்சம் ரொக்கப் பணம், 50 சவரன் தங்க நகைகள், சொகுசு கார் மற்றும் பல லாரிகளில் சீர்வரிசைப் பொருட்களை அள்ளி வழங்கி நடத்திய பிரம்மாண்ட விழா சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காதுகுத்து விழாவில், இரண்டு கண்ணாடிப் பேழைகளில் தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டது. அதுமட்டுமின்றி, 50 சவரனில் தங்க நெக்லஸ், வளையல், கம்மல், கொலுசு மற்றும் வெள்ளிப் பொருட்கள், ரூ.33 லட்சம் மதிப்பிலான புதிய மஹிந்திரா சொகுசு கார், 500 மூட்டை அரிசி, 50 கட்டு கரும்புகள் மற்றும் 500 வகை சீர்தட்டுகளை லாரிகளில் ஏற்றி வந்து சீர்வரிசையாகக் கொடுத்து உறவினர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஆரத்தி எடுத்து வரவேற்ற உறவினர்களுக்கு ரூ.500 நோட்டுகளை அள்ளித் தந்த கோகுலின் தந்தை ராமு, திமுக கவுன்சிலராகப் பொறுப்பில் உள்ளார். சீர்வரிசையைப் பெற்றுக் கொண்ட அவரது சகோதரி மதுரை தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வரும் நிலையில், அவரது கணவர் கதிரவன் தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத் துறையில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார். அரசு கஜானா காலியாக உள்ளதாகப் பேச்சுக்கள் எழும் சூழலில், திமுக பிரதிநிதியின் இந்த ஆடம்பரச் சீர்வரிசைப் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின.
இருப்பினும், இவ்வளவு சொத்துக்கள் மற்றும் ரொக்கப் பணம் குறித்து அவர்களின் உறவினர்களிடம் கேட்டபோது, உசிலம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட கோகுல் திருவாரூரில் நிதி நிறுவனம் (Finance & Chit fund), பேக்கரி, இனிப்பகம் மற்றும் வேளாங்கண்ணியில் தங்குமிடம் (Lodge) உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வருகிறார் என்றும், அத்தொழில்கள் மூலம் கிடைத்த வருவாயைச் சிறுகச் சிறுகச் சேமித்துத் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு நகைகளாகவும் சீர்வரிசையாகவும் வழங்கியதாகத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

