"குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை!" – மாணவன் அகிலன் உடல் அடக்கம்!

 
1

சாதிய வன்கொடுமையால் கோவையில் உயிரிழந்த பள்ளி மாணவர் அகிலனின் இல்லத்துக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் மாணவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.

இறுதி ஊர்வலத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வன்னி அரசு, "முதல்வர் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேற்று எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கின்றார். அகிலனுக்கு வீர வணக்கத்தை செலுத்தி இருக்கிறேன்.

நீதியரசர் சந்துரு அறிக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். பள்ளிகளில் நீண்ட காலமாக இருக்கின்ற சாதிய பாகுபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை களைய எல்லா வேலையும் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும்.

பள்ளிகளில் சாதிப்பெயர் இருக்கக் கூடாது என்பது தான் முக்கியமானது. அதை எடுப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. முழுமையான விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரும் தப்பிக்க முடியாது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "எவ்வளவு பெரிய சாதி பின்புலம் இருந்தாலும், குற்றவாளிகள் சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். முதல் நாளில் இருந்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது. நானும் அதைத்தான் வலியுறுத்தினேன்.

சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து அனைத்து சந்தேகங்களும், பிரச்சனைகளும் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நான் அமைச்சராக இல்லை என்றால் இந்த போராட்ட களத்தில் இருப்பேன், போராட்டக் களம் என்பது நீதி பெறுவதற்கான இடமே ஆகும்.

நான் அமைச்சரவையில் இருக்கிறேன், அமைச்சரவைக்குள் இருந்து என்னென்ன முடியுமோ அதை செய்கிறேன். அரசில் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பது கிடையாது, இந்த சமூக கட்டமைப்பு ஆயிரம் ஆண்டுகளாக சாதிகட்டமைப்பை உடையது.

8 பேர் அமைச்சராக வந்து விட்டோம் என்பதால் விடிவுகாலம் வந்துவிட்டது என நம்பவில்லை, இந்த சமூகம் சாதிய கட்டமைப்பு, சனாதான கட்டமைப்பு கொண்டது. அதை உடைக்க போராடி வருகிறோம். எட்டு பேர் அமைச்சராக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை, அனைத்தையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது. சாதிய அழுக்குகளை வேறறுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சாதிய பாகுபாடு களைகின்ற வரை சமூக விடுதலைக்காக போராட வேண்டியிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

மாணவன் அகிலன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மாணவனின் சகோதரிக்கு பழங்குடி உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணியிடமும், குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது

இதனையடுத்து பெற்றோர் மாணவர்களுக்கு உடலை பெறுவதற்கு முன் வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மாணவன் அகிலன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை மாணவன் அகிலனின் உடல் காந்தி மாநகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.