சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ.6 கோடி அபராதம் வசூல்

 
chennai police

சென்னையில், கடந்த 7 வாரங்களில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 5,738 பேர்களிடம் இருந்து ரூ.5.94 கோடி அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை பலவேறு புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல் முன்பு குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காருக்கும் இதே விதி பொருந்தும். அதாவது காரில் டிரைவர் மது அருந்தி இருந்தால், உடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

இதனால் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை செலுத்தாவிட்டால் அவர்களது வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கோர்ட்டு மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.