மூட்டைக்கு ரூ.50 லஞ்சமா?அமைச்சரின் திடீர் ஃபோன் காலில் சிக்கிய அரசு ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்!

 
1

தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்குள்ள விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு ஏதேனும் கூடுதல் பணம் அல்லது லஞ்சம் கேட்கப்படுகிறதா என்று அமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்தார்.

அமைச்சரின் இந்த நேரடி விசாரணையின் போது, அங்கிருந்த விவசாயிகள் சிலர் நெல் மூட்டைகளை போடுவதற்குத் தலா 50 ரூபாய் கட்டாயமாக லஞ்சம் வாங்கப்படுவதாக அமைச்சரிடம் நேருக்கு நேர் பரபரப்பு புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் வெங்கடரமணன், புகாரின் உண்மைத்தன்மையை உடனடியாகச் சோதிக்க அதிரடி முடிவெடுத்தார். கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் வரவுப் பதிவேட்டை வாங்கிப் பார்வையிட்ட அவர், அதில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு விவசாயியின் தொலைபேசி எண்ணிற்கு அங்கேயே தனது மொபைல் மூலம் நேரடியாக அழைத்துப் பேசினார்.

தொலைபேசியில் பேசிய அந்த விவசாயியும், தன்னிடம் நெல் மூட்டையை வாங்குவதற்கு 50 ரூபாய் லஞ்சம் பெற்றதை அமைச்சரிடம் உறுதிப்படுத்தினார். விவசாயி அளித்த இந்த நேரடி வாக்குமூலத்தை அடுத்து, லஞ்சம் வாங்கியது நூற்றுக்கு நூறு உறுதியானது. உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர், லஞ்சப் புகாரில் சிக்கிய மருவாய் கொள்முதல் நிலைய அரசு ஊழியரான (எழுத்தர்) வேல்முருகனை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யுமாறு, தன்னுடன் ஆய்வுக்கு வந்திருந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக எழுத்தர் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் மற்றும் ஊழியர்களின் லஞ்ச ஒழிப்பில் அரசு தீவிரமாக இருக்கும் நிலையில், அமைச்சரே நேரடியாக விவசாயிக்கு போன் செய்து லஞ்சத்தை உறுதிப்படுத்தி ஊழியரை சஸ்பெண்ட் செய்த இந்த சம்பவம் கடலூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதே வேளையில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.