விஜயின் விமானப் பயணத்திற்கு மட்டும் ரூ.3.55 கோடியா? வெளியான முழு கணக்கு
2026 சட்டமன்றத் தேர்தலில் ரூ.19.81 கோடி செலவு செய்ததாக த.வெ.க தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தாக்கல் செய்துள்ளது. ஊடக விளம்பரங்களுக்கு ரூ.6.35 கோடி, பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு ரூ.2.6 கோடி, விளம்பர பொருட்களுக்கு ரூ.40.55 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் விஜய் விமானப் பயணத்துக்காக மட்டும் ரூ.3.55 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் தவெக தாக்கல் செய்துள்ள செலவு விவரங்களின்படி, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருந்த கட்சி தலைவர் சி.ஜோசப் விஜயின் விமானப் பயணத்திற்காக ரூ.3.55 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளுக்காக ரூ.40 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொருளாளர் பி.வெங்கடரமணன் கையெழுத்திட்டுள்ள இந்த அதிகாரபூர்வ செலவு அறிக்கையில், பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சியின் தலைமை அலுவலகம் ரூ.19.4 கோடி செலவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கான செலவு இல்லை ?
மேலும் தவெக தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில், கட்சி வேட்பாளர்களுக்காக எந்தவித தேர்தல் செலவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வேட்பாளர்களே தங்களது பிரச்சாரச் செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என அந்த அறிக்கை மூலம் தெளிவாகிறது.
மேலும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரைவிஜயின் விமானப் பயணத்திற்கான கட்டணங்கள் TAJ Events Pvt Ltd, Chipsan Aviation Pvt Ltd மற்றும் Fly High Global Aircraft Management Services Pvt Ltd ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மற்ற தலைவர்களின் பயணங்களுக்காக எந்த செலவும் பதிவு செய்யப்படவில்லை.
விளம்பரத்திற்காக ரூ.6.35 கோடி
தவெக-வின் பொதுப் பிரச்சார செலவுகளில் அதிகபட்சமாக ரூ.6.35 கோடி ஊடக விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இதில் அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் மற்றும் வானொலி உள்ளிட்ட விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், Aadhav Arjuna-வின்Voice of Common Strategic Consulting Private Limited நிறுவனத்திற்கு ரூ.1.79 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்காக ரூ.2.06 கோடியும், விளம்பரப் பொருட்களுக்காக ரூ.40.55 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. ‘Books’ என பட்டியலிடப்பட்டுள்ள விளம்பரப் பொருட்களும் இதில் அடங்கும். பிரச்சாரத்திற்கான பிற செலவுகளாக ரூ.7.04 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர் விஜய்க்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டதாகவும் செலவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

