மெட்ரோ ரயிலில் தொந்தரவு அளித்தால்... நேற்று வரை ரூ.500; இன்று முதல் ரூ.2,500 அபராதம்!

 
metro

சென்னை மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் பிற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு அதிகபட்சம் ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் பிற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு அதிகபட்சம் ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும். அலைபேசியில் உரத்த குரலில் பேசுதல், ஸ்பீக்கர் மோடில் இசை அல்லது வீடியோ ஒலிக்கவிடுதல் விதிமீறலாகக் கருதப்படும்.
ஹெட்போன் பயன்படுத்தாமல் அலைபேசியில் இசை அல்லது வீடியோ பார்ப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படலாம். சக பயணிகளின் வசதி மற்றும் அமைதிக்காக ஹெட்போன் பயன்படுத்தி, உரத்த குரலில் பேசுவதையும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.