மாஸ்க் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ. 2.18 லட்சம் அபராதம் வசூல்!!

 
mask

தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில்   1, 728 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 52 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.  இந்த சூழலில் கொரோனா  மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும்  சுகாதாரத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார் . அக்கடிதத்தில் விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதற்கு தயங்காதீர்கள்,  நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

masks

இந்த சூழலில் நேற்று முதல் சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை  தடுக்கும் வகையில் 15 மண்டலங்களில் தலா 3 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு,  தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.  இதில் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி முதல் 3ம் தேதி வரை முகக்கவசம் அணியாத 2,608 பேரிடமிருந்து ரூ.5.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ttn

குறிப்பாக நேற்று ஒரே நாளில் சென்னையில் முகக்கவசம் அணியாத ஆயிரத்து 22 பேரிடம் இருந்து ரூ.2.18 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களாக காணப்படும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  பொது மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.