தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு ரூ.18,178 கோடி கடன்..!

தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு ரூ.18.178 கோடி கடன் இருப்பதாகப் போக்குவரத்துத் துறை வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், வாகனக் கொள்முதல் கடன் ரூ.589.76 கோடி, குறுகியகாலக் கடன் ரூ.5,981.82 கோடி,, நடைமுறை மூலதனத்திற்கான பருவக் கடன் ரூ.11,607.23 கோடி.
கொவிட்-19 பெருந்தொற்றால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேண்டியிருந்ததால், 2021 - 2022ஆம் ஆண்டு முழுவதும் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் கடன்களின் அளவு அதிகரித்துள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளதாகவும் கடைசியாக 2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 2020ஆம் ஆண்டிலும், ஆந்திராவில் 2022ஆம் ஆண்டிலும் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டது.
கடும் நிதி நெருக்கடியிலும் கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கு குறைந்த கட்டணத்திலேயே பேருந்து சேவை வழங்கப்பட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தின்மூலம் மகளிர் இதுவரை ஒட்டுமொத்தமாக 490 கோடி முறைக்குமேல் பயணம் செய்துள்ளனர் என்றும் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு மகளிர் 888 ரூபாய் சேமித்துள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.