ரூ.147 லட்சம் கோடி கடன்.. பாஜக-வால் இந்தியா அடைந்த வளர்ச்சி இதுதான் - மு.க.ஸ்டாலின் தாக்கு..

 
ரூ.147 லட்சம் கோடி கடன்.. பாஜக-வால்  இந்தியா அடைந்த வளர்ச்சி இதுதான் - மு.க.ஸ்டாலின் தாக்கு..

இந்தியாவின் கடன் தற்போது  ரூ. 147 லட்சம் கோடி என்றும், பாஜகவால் நாடு கண்ட வளர்ச்சி இதுதான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  

 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறதே? என்கிற கேள்விக்கு ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ தொடரில்  பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ இந்தியாவை வளர்த்துள்ளோம்... வளர்த்துள்ளோம் என்று பா.ஜ.க  சொல்வது எது தெரியுமா? 2014-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஒரு சிலிண்டரின் விலை 414 ரூபாய். இப்போது ஒரு சிலிண்டரின் விலை 1,118 ரூபாய் 50 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 72 ரூபாய் 26 பைசா. இப்போது விலை 102 ரூபாய் 63 பைசா. ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 55 ரூபாய் 49 பைசா. இப்போது விலை 94 ரூபாய் 24 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒன்றிய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி ரூபாய். இப்போது இருக்கும் கடன் 147 லட்சம் கோடி ரூபாய். அதாவது மூன்று மடங்கு அதிகம்! இதுதான் பா.ஜ.க.வால் இந்தியா அடைந்த வளர்ச்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்..  

 கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

அத்துடன், கீழடி அருங்காட்சியகம் குறித்த கேள்விக்கும் பதிலளித்திருக்கிறார். அதில், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த காலத்தில் இருந்து, கீழடிக்காகத் தொடர்ந்து சட்டமன்றத்தில் - மக்கள் மன்றத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். எங்களுடைய தொடர் வற்புறுத்தலால்தான், அகழாய்வுப் பணியே நடந்தது. அங்கு அருங்காட்சியகம் அமையுங்கள் என்று தொடர் கோரிக்கை வைத்தேன். வெறும் அடிக்கல் மட்டும் நாட்டிவிட்டு, எந்த பணியையும் செய்யாமல் இருந்தார்கள். நாம் ஆட்சிக்கு வந்தவுடன்தான், அந்தப் பணியை விரைவுபடுத்தி, இப்போது முடித்திருக்கிறோம். அந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்துப் பார்க்க தொடங்கியதும், என்னால் நகரவே முடியவில்லை. ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுபோல இருந்தது.

கீழடி

2600 ஆண்டுகளுக்கு முன்னால், கீழடியில் வாழ்ந்த மக்கள் என்னவெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதைக் கண்டுபிடித்து, சேகரித்து நமது அரசு காட்சிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் நின்று ஆர்வத்தால், செல்ஃபி (தாமி) எடுத்துக்கொண்டேன். எத்தகைய நாகரிகமும், பண்பாடும் கொண்டவர்களாகத் தமிழர்கள் இருந்தார்கள் என்பதை அறியும்போது பெருமையாக இருந்தது. அருங்காட்சியகம், காணொலி, தொடுதிரை, 3ஞி எனத் தொழில்நுட்பத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தங்களது பெயரினைத் தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். அனைவரும் நேரில் சென்று பாருங்கள். உலகத் தமிழர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கீழடி வந்து பாருங்கள். இதே போல் நெல்லையில் பொருநை அருங்காட்சியகமும் தயாராகி வருகிறது என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.