நீட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 உயர்வு - மாணவர்கள் அதிர்ச்சி

 
neet

நீட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் அதிர்சி அடைந்துள்ளனர். 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை  நீட்  நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும்  தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது.  நடப்பாண்டுக்கான நீட் தகுதித் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இளநிலை நீட் தேர்வு  மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று, முன்னதாக  என்டிஏ அறிவித்திருந்தது. 2023-24ம் ஆண்டின் நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.  தமிழ்நாட்டில் 5,500க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் . மற்றும் பி.டி.எஸ்.இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், நீட் விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1600ல் இருந்து ரூ.1700 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல், ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500ல் இருந்து ரூ.1600 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.900ல் இருந்து ரூ.1000 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.  விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.