மீண்டும் பரபரப்பு! ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி

 
atm

காஞ்சிபுரத்தில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள், போலீசாரின் ரோந்து வாகன சத்தத்தை கேட்டு தப்பிச் சென்றனர். 

கடந்த மாதம் திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் 4 ஏடிஎம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஏடிஎம் கொள்ளையில் சுமார் 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தை அரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பல் அரங்கேற்றி இருந்தது தெரியவந்தது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா அருகே  தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள், போலீசாரின் ரோந்து வாகன சத்தத்தை கேட்டு தப்பிச் சென்றனர். வாலாஜா அருகே ராஜம்பேட்டையில் தனியார் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது.  இந்த ஏடிஎம் மையத்தில் இன்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் கடப்பாறை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கடப்பாறை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் உடைத்துக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக போலீசாரின் ரோந்து வாகனம் சைரன் ஒலி எழுப்பிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. போலீசார் வாகனம் வருவதை அறிந்த கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட்டினர். போலீசார் வந்து பார்த்த போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.